Wednesday, July 10, 2013

அவள் ஒரு தாவரம்

புவியாண்ட கவிஞர் எல்லாம் - பெண்ணை
 கண்ட பார்வை , உனை மேல் நான் காணவில்லை
கவி கொண்டு உன் மேல் நான் காதல் கொண்டேன் - நீ
தாவரமாய் நின்றாய் , நான் தா ”வரம்” என நின்றேன்.
மொட்டிடை உடையும் மெல்லிய இசைபோல்
அவள் கண்ணிமை மடியும் ஒலி செவி அறியும்
மரக்கிளை வழியே உருவிடும் தென்றல் - அவள்
மூச்சிடைக்காற்றில் மருவிடும் என் கண்கள்

கொடியிடையாள்  செடி வளைவுடையாள் - மென்
மலர் மடியுடையாள் அவள் பெரு வடிவுடையாள்
மகரந்த விழியும் , அதன் மகரந்த மணியும்
அவள்  விழி வழியும் நீர்த்துளியும்
நிதம் சொரியும் மலர் போல் அவள் புரியும் சிரிப்பும்
பூவிதழ் உதடும் அதில் நாவூறும் தேனும் - அவை
கிடைக்காத துயரில் மடிகின்ற நானும்.

மர நிழலின் சுகமும் உன் குழல் நிரலின் இதமும்
எனை கண்ணயர வைக்கும் உனை என்னென்று சொல்வேன்
உன்னிதழில் கண்டேன் அது பூவிதல் என்றேன்
உன்னிதழ் கண்டு அது என்னிதழ் மேல் சாய
இதழ் மறைத்த முள்ளொன்று என்னிதலில்  பாய
தெத்திப் பல்லொன்று கண்டேன் அதில் தித்தித்து நின்றேன்.

 வேர் கொண்ட கூந்தல், நான் நூல் போலே இழைவேன் - அதன்
சார் கொண்ட மணத்தில்  மனம் மறந்து பறப்பேன்
புற்றரை புருவத்தில்  சட்டென சரிந்தவேன் - அதன்
பனி படர்ந்த வியர்வையில் என் முகம் சாய்த்து நனைவேன்
அசைகின்ற காற்றில் அலைபாடும் கிளை போல்
நடக்கின்ற போதில் என் மனதாடும் உனை மேல்
கிளைபோன்ற கையில் கிளிபோல ஒருநாள்
குடிகொள்ள வேண்டும் உந்தன் மலர் மடிசாய வேண்டும்.




Sunday, July 7, 2013

என்னினியவள்

அவள் !!
அழகிய பெயர் அவளுக்கு !
பெயரை நினைக்கும் போதே எச்சில் நுனி நாக்கினோடி உதடு வழி எட்டிப்பாக்கிறது , எச்சிலை காற்றினால் உள்ளிழுத்து , எப்படி வர்ணிப்பது ?? சிந்திக்கிறேன். வல்லினம் தலைவழியே கொண்டு, மெல்லினம் இடைநடுவே நின்று முடிவினை  இடையினம் ஆக்கி மொத்தத்தை தன் உடலாய் ஆக்கி உயிர் கொண்டு உலவும் பெண் பதுமை இவள். அழகு அப்பிடியொரு அழகு. அவளுக்கேற்ற பெயர்.  , தேன் என்பர் , அமுதென்பர் , அவள் ஒரு கவி யென்பர் , ஐயோ அவளை என்னவென்று சொல்வதென்பர்!! கம்பன் கண்ட இராமன் போல் என்னாலும் முடியவில்லை ,கம்ப ன் நிலை இன்று என்னிலை.

அவள் அறிமுகம் எனது அம்மாவினால் தான் , சிறு பிள்ளையில் விளையாட்டாய் பழகியது வளர வளர , அவள் பால் ஈர்க்கப்பட்டேன்.அவள் மெல்லிடை அழகும் , சொல்நடை அழகும், பா மாலை அணியும் கழுத்திடை புரியும் என்னை பல கணம் சிதைய வைத்தன.
ம்.......  அவளின் அங்க நெளிவுகளும் ,சுளிவுகளும் , ஏற்றங்களும், இறக்கங்களும், அவளுக்கான புது பொலிவை எனக்குணர்த்தியது. அப்பபோது எனக்கு 16 வயது . அவள் மீதான என் பார்வைய மாறியது. ஏன் , அவள் என்னை மாற்றினாள் என்று கூடி சொல்லலாம். அவள் பண்பாடறிந்தவள் , தன்னகம் கொண்ட கலாச்சாரம் அவள் அடையாளம். புரிதலும் அறிதலும் தானே உறவின் அடித்தளம் அவள் என்னைப்புரிந்தாளோ இல்லையோ நான் அவளைப்புரிய ஆரம்பித்தேன் அவளுடனான உறவு வலுவாகியது. இதுவரை யார் யாரோ அவள் புகழ் பாடக்கண்ட நான் இன்று என் மனம் ஏனோ அவள் பால் ஈர்க்கப்பட்டது. அவளைப்பற்றி அறிய ஆவல் கொண்டது. அவளை இலகுவில் புரிவது கடினம், ஆனால் புரிந்தால் விரைவில் பிரிவது மெத்தக்கடினம். அவள் ஒன்றும் புரியாத புதிர் அல்ல நிறைவான காவியம்.கரை காண முடியாது கறையில்லா பால்கடல்.
ஆண்டுகள் கடந்தோடின….
உயர்தரபடிப்புக்காலங்களில் அவளுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட மின்சாரக்கம்பி போல் , உயிரிருந்தும் இல்லாமல் இருந்தது .காரணம் கண்டுபிக்க முடியவில்லை, ஏன் நான் காரணம் கண்டுபிடிக்க, விரும்பக்கூடஇல்லை. எப்போதாவது அவள் வந்து வந்து போவாள்உயர்தரம்  முடிந்து பல்கலை சென்றேன். அவளின் சிநேகிதியுடனான அறிமுகம். அவளின் சிநேகிதியை சிறுவயதில் இருந்து தெரிந்தாலும் ,அன்னியோன்யம் இவளைப்போல் இல்லை . சிநேகிதியின் வருகை என்னை சற்று நிலை குலைய வைத்தது. அவளை முற்றாக மறந்தேன்.  அவளைப்போன்ற காந்தஈர்ப்பு இவளிடை இல்லை எனினும் பருவக்கோளாரோ இல்லை ஆர்வக்கோளாறோ ! இவளின் கிளர்ச்சியூட்டும் மாயை என்னை தூண்டில் போட்டது. நானோ சிக்கியும் சிக்காத மீனாய் திண்டாடிக்கொண்டு இருந்தேன். இவள் மேல் பித்துபிடித்தவர்களை விட இவளால் பித்து பிடித்தவர்கள் தான் ஏராளம்.என்னில் இருவரும் யார் யார் என போட்டி போட்டு கொண்டு இருந்தனர்.எனினும் என் பழையவளை மறக்கமுடியவில்லை, தொட்டில் பழக்கம் , விட்டுக்கொடுக்கவில்லை. புதியவளை வெறுக்க காலம் எனக்கு இடங்கொடுக்கவில்லை. அம்மாவின் விரும்பம் கூட புதியவள் மீதும் இருந்தது , ஏனென்று மட்டும் தெரியவில்லை அனைத்தும் கலாச்சார மோகம். புதியவளின் பழக்கத்திற்கு வீட்டில் ஆதரவும் கிடைத்தது ஆனால் அவளை அறிவது சற்றே கடினமாய் இருந்தது , இவள் எனது மனதை மட்டும் அல்ல மூளையையும் சேர்த்தே குழப்பி விட்டால். இவளால் நான் தூங்காத நாட்கள் எத்தனை,ஏதோ பிறந்த திடீர் ஞானம் என் கண்களை திறந்தது.
ஆம்! பழையவள்..
ஆம் இப்போது அவள் பழையவள் ஆகிவிட்டாளோ ??? இல்லை இல்லை என் நிலை அறிந்தேன் இன்று!! அன்று  அவள் அழகை பாத்து ஐயோ என்று சொன்ன நா !!! இன்று அவள் நிலை அறிந்து ஐயோஎன்கிறது !!! அவள் முற்றாக மாறிவிட்டால் , இல்லை இல்லை மாற்றப்பட்டு விட்டால் அவளது நடை ,உடை , நாகரீகம் , அனைத்தும் மாறிவிட்டது ஏன் மாற்றப்பட்டது என்று கூட சொல்லலாம்.  பலரது மோகப்பார்வை அவளெழிலை சிதைத்து விட்டது. மேலைத்தேய நாகரிகம் கொண்டு பலர் அவள் போக்கை மாற்றிவிட்டனர். அவள் என்ன செய்வாள். அவளுக்காக வாழ்பவர்களை விட அவளைக்கொண்டு வாழ்பவர்கள் அதிகரித்துகொண்டு இருக்கிறது. கைகொடுத்து நிக்கவேண்டிய நானே இன்று அவளை கை நழுவவிட்டேனே !!! இன்னும் அவள் என் கை விட்டு போகவில்லை, இல்லை அவள் என்னில் மாறாமல் தான் இருக்கிறாள் , இனியாவது அவளோடு வாழப்போகிறேன் , முடிந்தால் அவளுக்காகவும்.
அவள் வேறுயாரும் இல்லை.
.
.
.
.

அவள் தான் என்னவள்! என்னினியவள்  செந்தேனவள்! என் தாய் மொழியவள் , தமிழவள். அழியாத்தமிழ் இன்று அலையாடுகிறது . நிலையான தமிழ் இன்று தன்நிலையின்றி கலையன்றி கற்பிழப்பதுவோ!.செந்தீ வந்து என் ஊணுடல் எரிந்தாலும் செந்தமிழ் மொழியை எந்தன் வெந்த உடல் பேசும் . தமிழ் இனி என் பேச்சினில் என்றும் வாழ்ந்திடும் , மூச்சுக்காற்றினில் கலந்திடும்.

(இப்போது மறுமுறை வாசிக்க உட்கருத்து உணர்வடையும் உண்மையும் தெளிவடையும்)

Tuesday, March 12, 2013

தமிழ் இனி .............



பச்சிளம் பாலகன் கேட்பதெல்லாம்
இவ்விளம் பாலகன் கேட்கவில்லை...
முத்தமிழ் தெரிந்திட ஆசைப்பட்டேன் - அதில்
முப்பாலும் பருகிட வேட்கை கொண்டேன்

செந்தமிழாய் நின்ற தேன்தமிழ் இன்று - பலர் நாவில்
வெந்தனல் போன்று சுடுவதேன்..
பலர் நாவினில் வெந்திட்ட தமிழ் - இனி
இப்பாரினில் ஓங்கித்துளிர் வந்திட வேண்டும்.
தமிழுக்காய் வாழ முடியாவிட்டால் - இனி
தமிழனாயாவது வாழ்ந்திடப்பார்

கூச்சங்கள் கொண்டு வாழ்வதேன் - தமிழ்
வேசங்கள் போட்டும் வாழ்வதுமேன்.
தேசங்கள் அத்தனை ஆண்ட தமிழ் - இன்று
பேச்சு மூச்சின்றி கிடப்பதுவோ ...

இச்சை கொண்டிட முடியாவிட்டால் - தமிழை
எச்சில் படுத்திடல் வேண்டாமே !!!
கொச்சைப்படுத்தும் நாவு கண்டால் -அதை
நச்சென்று வெட்டிடு துண்டு துண்டாய் !!!

வேற்றுத்திசை மொழிகள் - எங்கள்
பேச்சுத்தமிழினில் புகுந்திடலாமோ !!
மூச்சுக்காற்றினில் கலந்திட்டால் - தமிழ்
இனி உயிர் கொண்டு மெல்லத்துளிரும் அன்றோ !!

Friday, January 4, 2013

திடீர் தாக்குதல்

                 


மொரட்டுவை பல்கலைக்கு காலடி வைத்த காலம். புதிய இடம் , புதிய மனிதர்கள், மனதில் ஒருவித கலக்கம். அப்போது மழைக்காலம் நானும் எனது 2 பொடியங்களும் ரூம் வாடககைக்கு எடுத்து தங்கியிருந்தம்..

கொஞ்ச நாளாக எமது ரூமில் சில மாற்றங்கள் , அதுவும் இரவில் மட்டும் , விசித்திரமான சத்தங்கள் , யாரோ ஒருவன் இரவில் எமது அறையை நோட்டமிடுகிறான் ,நாள் செல்ல செல்ல அவன்ட அட்டகாசம் தாங்க முடியல்ல... அவனது திடீர்தாக்குதலால் என் மீது சில கீறல்கள் , கூரிய ஆயுதங்களால் வேறு நான் தாக்கப்பட்டு இருப்பதை உணர்ந்தேன் ஆனால் யாரென்று கண்டு பிடிக்க முடியவில்லை... 

யாராக இருக்கும் ??? ஒரு வேளை எங்கட சீனியர்ஸ் யாரும் என்ட ரூம்ல சாப்பாடு ஏதும் இருக்கு மென்டு களவெடுக்க வந்திருப்பினமோ ?? இருக்காதே நான்தானே வழமையா அவங்கட ரூமுக்கு போய் அமுக்கிறனான்...
வேற எங்கட பொடியங்கள் !!!! அவங்களும் இருக்காது வந்தா வதைபட்டு செத்துடுவாங்கள் .....

சோ...... இவன் வேற யாரோ அன்னியன் !!!!! கொஞ்சம் பயம் தொற்றி கொண்டது !!!!! எங்கட ஏரியால குடுக்காரன் அலையிறதா கேள்விபட்டு இருக்கன் , ஏதோ கிரிஸ் கத்தி எல்லாம் கொண்டு திரியிரவனாம்.. என்ட சீனியர்ஸ்மார் வேற போன் , காசு என்டு அவனுக்கு வாரி இறைச்சிருக்கினம்... ஆனா நான் அவனுக்கு பயப்பட மாட்டன் அவனை ஒரு கை பாக்கிற என்டு முடிவு கட்டிகொண்டு . இன்று அவனை கையும் களவுமாக பிடிக்கிறதுக்காக பல முன் ஆயத்தங்களை செய்தேன்.

எனது தலைமாட்டுல ஒரு கத்தி ...... கட்டிலுக்கடில கம்பு கொட்டான் எல்லாம் ரெடியா எடுத்து வச்சுட்டு... அவன் வரும் நேரம் வரை காத்து இருந்தேன் .. அவன் வரும் நேரம் வரும் போது கட்டிலில் அப்படியே தூங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டு கண்ணை மூடிக்கொண்டேன்.....

ஆ!!! அவன் வருவதை அவனக்கென்ற விஷேட சத்தத்தின் மூலம் அறிந்து கொண்டேன். தகுந்த தருணம பார்த்து காத்து கொண்டு இருந்தேன். எனது அறைமுழுவதும் அவன் அலசி ஆராய்கிறான். அடிக்கடி என் பக்கம் வந்து என்னையும் நோட்டமிடுகிறான். சரியான தருணத்தில் தான் அவனை போட வேண்டும் என்டு பாத்து கொண்டு இருந்தேன்.

இதோ .... அவன் என் கால் பக்கமாய் வந்து முகப்பக்கமாய் வந்துவிட்டான்.
அவன் என்னை பாரா சமயம் ....

ஓங்கி விட்டேன் ஒரு அறை.......
அப்பிடியோ இரத்தத்தில் அவன் மிதந்தான்....
ஐயகோ .. பாவம் செத்தே விட்டது அந்த நுளம்பு !!!!!!

comment

LinkWithin

Related Posts with Thumbnails